பாகிஸ்தான் விமானத் தாக்குதல்: 30 பொதுமக்கள் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அந்நாட்டு விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாகி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதன்படி, நேற்று அதிகாலை திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் எட்டு குண்டுகளை வீசி தாக்கின. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அச்சம் நிலவுகிறது.

இந்த தாக்குதலுக்கெதிராக அந்தப் பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சொந்த மக்கள்மீது ராணுவம் ஆயுதம் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என சமூகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பொதுமக்கள் உயிருக்கும், சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிக்காமல் ராணுவம் செயல்படுகிறது என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.

அந்த மாகாண போலீசார் கூறியதாவது: “இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 605 தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 138 பொதுமக்களும், 79 போலீஸாரும் பலியாகினர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 129 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன,” என்றனர்.

Facebook Comments Box