ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை
லிபிய முன்னாள் தலைவர் கடாபிக்கு ஆதரவாக செயல்பட, தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படும் வழக்கில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு பாரிஸ் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதித்துள்ளது.
2007 முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. லிபியாவை 1969 முதல் 2011 வரை ஆட்சி செய்தவர் மம்மர் கடாபி. கடாபி கொல்லப்பட்ட பிறகு அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்தக் காலத்தில், கடாபிக்கு உள்ளூர் மற்றும் உலகளவில் கடும் எதிர்ப்பு இருந்தபோதும், அவருக்கு ஆதரவாக சர்வதேச மேடைகளில் பேசுவதற்கு சர்கோஸி முன்வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்குப் பதிலாக, கடாபி சர்கோஸியின் தேர்தல் பிரசாரத்துக்கு நிதி உதவி செய்ய ஒப்பந்தம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை பரிசீலித்த பாரிஸ் நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து சர்கோஸிக்கு தண்டனை வழங்கியுள்ளது. தீர்ப்பை அவர் மேல் முறையீடு செய்தாலும், சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
தன்னிடம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வரும் சர்கோஸி, “நீதிமன்றத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்வேன். அவர்கள் என்னைச் சிறையில் தூங்கச் சொன்னால் நான் தூங்குவேன்; ஆனால் எப்போதும் தலைகுனிய மாட்டேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.