‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ ஆவணத்தில் பெயர் – எலான் மஸ்க் விளக்கம்
‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ எனப்படும் பாலியல் குற்றச்சாட்டு ஆவணங்களில் தன் பெயர் இடம்பெற்றுள்ளதாக வந்த செய்திக்கு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.
புதியதாக வெளியான 6 பக்க ஆவணங்களில், 2016 டிசம்பர் 6ஆம் தேதி மஸ்க் வர்ஜீனியாவில் உள்ள எப்ஸ்டீன் தீவுக்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் அவர், “தவறான தகவல்” எனக் குறுகிய முறையில் மறுப்பு தெரிவித்துள்ளார். எந்த கூடுதல் விளக்கமும் அளிக்காமல் ஒரே சொல்லில் மறுத்தது, குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரிப்பதாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அவரது தரப்பு வலியுறுத்தியுள்ளது.
எப்ஸ்டீன் வழக்கின் பின்னணி
2015ஆம் ஆண்டு, அமெரிக்கப் பெண் வர்ஜீனியா கிஃப்ரே, பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் மீது வழக்கு தொடர்ந்தார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் இணைந்து சிறுமிகளை பாலியல் தொழிலுக்காக கடத்தினார் என அவர் குற்றஞ்சாட்டினார். தானும் 1999 முதல் 2002 வரை பல பிரபலங்களுடன் கட்டாயப்படுத்தப்பட்டு தொடர்பில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். ஆனால் 2019ல் நியூயார்க் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் வழக்கு முடங்கியது. அதுவரை வெளியில் வராமல் சீலிடப்பட்டிருந்த ஆவணங்களை கடந்த ஆண்டு நீதிபதி லொரட்டா ப்ரெஸ்கே பகிரங்கப்படுத்த உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் வெளியான ஆவணங்கள் ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்று அழைக்கப்பட்டன. இதில் பிரின்ஸ் ஆண்ட்ரூ, விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், முன்னாள் அதிபர் பில் கிளின்டன், டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பலர் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் எலான் மஸ்க், ட்ரம்பின் கூட்டாளி ஸ்டீவ் பேனோன் போன்றோர் பெயரும் சேர்க்கப்பட்டதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.