“இதுதான் எதிர்காலம்” – சீனாவின் ரோபோ கால்கள் அமெரிக்கரை வியப்பில் ஆழ்த்தின!
தொழில்நுட்பங்களில் புதுமையை முன்னேற்றி வளர்ச்சி அடையும் சீனா, தற்போது அடுத்த கட்ட முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இதற்கு ஒரு உதாரணமாக, சீனாவில் போர்டபிள் ரோபோ கால்களைச் சோதித்த அமெரிக்கர், அதன் செயல்பாடுகளைக் காணத் தன் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச அறிவியலில் நிகழும் வேகமான முன்னேற்றங்கள், எப்போதும் புதிது புதிதாக தொழில்நுட்பங்களை உருவாக்கி மக்களை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. ஏஐ (Artificial Intelligence) அறிமுகமான பிறகு, பழைய கருவிகள் புதிய வடிவங்களில் வருகிறதை நாம் பார்த்து வந்தோம்; சீனாவில் நடந்த சம்பவமும் அதுபோலதான்.
அமெரிக்காவைச் சேர்ந்த கண்டென்ட் கிரியேட்டர் கிறிஸ்டியன் க்ரோஸி, ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜியே தேசிய பூங்காவிற்கு சென்றார். அங்கு பார்வையாளர்கள் பூங்காவை சுவாரஸ்யமாக அனுபவிக்கவும், குழப்பம் தவிர்க்கவும் “robotic legs” எனப்படும் ரோபோ கால்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த ரோபோ கால்கள் வாடகைக்கு சுமார் 2,000 ரூபாய்க்கும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு 84,000 ரூபாய்க்கும் கிடைக்கின்றன. க்ரோஸி அவற்றின் சிறப்பம்சங்களை நேரில் சோதித்து, அதிர்ச்சியடைந்து தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “இது எனக்காகவே நகர்கிறது” என வியப்புடன் அவர் பேசிய வீடியோ, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இடுப்பு மற்றும் கால் முட்டியை இணைத்து பொருத்தப்படும் ரோபோ கால்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் நடப்பதை எளிதாக்குகின்றன. நடப்பதில் சிரமப்படும் நபர்கள், நடைபயணம் செய்யும் நபர்கள் போன்றோருக்கு இதன் பயன்பாடு மிகவும் உதவியாக உள்ளது. நிகழ்நேரத்தில், நமது அசைவுகளுக்கு ஏற்ப ரோபோ கால்கள் தானாக சரிசெய்து நடப்பதற்கான உத்வேகம் தருகின்றன.
செப்டம்பர் 25 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ, கோடியே 70 லட்சம் பார்வைகளை கடந்துவிட்டது; 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். க்ரோஸியின் வீடியோ உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் பொதுமக்களில் ரோபோ கால்களை வாங்கி பயன்படுத்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயதானவர்கள் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் ரோபோ கால்களை “வரப்பிரசாதம்” என்கிறார்கள். இதேவேளை, சீனா உலகின் முன்னணி தொழில்நுட்ப நாடாக உயர்ந்திருப்பதையும், அமெரிக்கா விரைவில் இதனை உணருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.