அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா நாட்டிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதை தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாயை பறித்துக்கொள்ளும் போல், அமெரிக்காவின் திரைப்படத் துறையை பிற நாடுகள் பறித்துக் கொண்டுள்ளன. இதில் மிகவும் பாதிக்கப்பட்டது கலிபோர்னியா மாநிலமே. அங்கு திறமையற்ற மற்றும் பலவீனமான ஆளுநர் ஆட்சியில் இருப்பதே அதற்குக் காரணம்.

இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வாக, அமெரிக்காவுக்கு வெளியே எடுக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்க தீர்மானித்துள்ளேன். அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றுவேன்,” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கடந்த மே மாதமே அவர்,

“அமெரிக்க திரைப்படத் துறை வேகமாக சிதைந்து வருகிறது. பிற நாடுகள் ஒருங்கிணைந்த முறையில் அமெரிக்காவை பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றன. இது பொருளாதாரத்துக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல். மேலும், வெளிநாடுகளில் உருவாகும் திரைப்படங்கள் பெரும்பாலும் பிரச்சார பாணியில் உள்ளன.

எனவே, மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும். இதற்காகவே இந்த புதிய வரி நடைமுறை. இது போட்டியை சமமாக்குவதோடு, அமெரிக்க ஸ்டூடியோக்கள் தொடர்ந்து செயல்பட ஊக்குவிக்கும்,” என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கையை அமெரிக்க வணிகத் துறை மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் கவனிக்க அனுமதி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் தங்கள் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கின்றன என குற்றம்சாட்டிய ட்ரம்ப், அதற்கு பதிலடி வரி விதிப்பதாக அறிவித்திருந்தார். அதற்கான பட்டியலையும் வெளியிட்டு, 90 நாள் காலக்கெடுவை நிர்ணயித்தார்.

இந்த காலக்கெடு முடிந்ததும், இந்தியாவைச் சேர்த்தும் பல நாடுகளுக்கு எதிராக வரிகள் அமல்படுத்தப்பட்டன. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 சுற்றுகள் நடந்தும், அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட வேளாண் பொருட்கள் மற்றும் பால் பொருட்கள் தொடர்பான கோரிக்கையை இந்தியா நிராகரித்ததால், ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

இதையடுத்து, இந்திய பொருட்களுக்கு 25% வரி, பின்னர் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக கூடுதலாக 25% வரி விதித்து, மொத்தம் 50% வரி விதித்தார். சமீபத்தில், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கும் 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தது நினைவிற்குரியது.

Facebook Comments Box