கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல் தெரிவித்த சீன பெண் பத்திரிகையாளருக்கு தண்டனை நீட்டிப்பு

சீனாவில் கொரோனா தொற்று பரவல் குறித்து முதலில் தகவல் வெளியிட்ட பெண் பத்திரிகையாளர் ஜாங் ஜானுக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

42 வயதான ஜாங் ஜான், கொரோனா ஆரம்பத்தில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து நேரடி அறிக்கைகள் வெளியிட்டார். நெரிசலான மருத்துவமனைகள், வெறிச்சோடிய தெருக்கள் உள்ளிட்ட காணொளிகள் மற்றும் பதிவுகளை வெளியிட்ட அவர் மீது, “மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தினார், விவாதத்தை தூண்டினார்” என்ற குற்றச்சாட்டில் சீன அரசு வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து 2020 டிசம்பரில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு சிறையில் அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 2024 மே மாதம் அவர் விடுதலையானார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டபோது, அவர் மீது எதற்காக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது என்பதை சீன அதிகாரிகள் தெளிவாக விளக்கவில்லை. இருப்பினும், சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே பத்திரிகையாளர்கள் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்ட நாடாக சீனா உள்ளது. தற்போது குறைந்தது 124 ஊடக ஊழியர்கள் அங்கு சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box