பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி, 32 பேர் காயம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத் தலைநகரான குவெட்டாவில் துணை ராணுவப் படை தலைமையகத்தை ஒட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்தனர்.

குவெட்டா சர்குன் சாலையில் அமைந்துள்ள துணை ராணுவப் படை (Frontier Corps) தலைமையகத்தின் பக்கத்தில், சாலையை ஒட்டிய பகுதியில்தான் வெடிப்பு ஏற்பட்டது. அப்போது சாலையில் வாகனங்கள் இயங்கி கொண்டிருந்தன. திடீரென ஏற்பட்ட இந்த வெடிப்பின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிப்பு மிகுந்த சக்தியுடன் ஏற்பட்டதால் அருகிலிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகள் சிதறின. வெடிப்பின் சத்தம் அருகிலிருந்த நகரங்களிலும் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வெடிப்புக்குப் பின்னர் துப்பாக்கிச் சூடு ஒலியும் கேட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் வீடுகளுக்குள் தங்கியிருந்தனர்.

தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. நகரிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடம் முற்றுகையிடப்பட்டு, தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம், துணை ராணுவப் படை தலைமையகம் அருகே வந்தபோது வெடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 10 பேர் பலியாகினர். அவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். காயமடைந்தவர்கள் குவெட்டா சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர் பக்த் முகமது தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box