நிவாரணப் பொருட்களுடன் காசாவை நோக்கி சென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகை, இஸ்ரேல் கடற்படை இடைமறித்துள்ளது.

பாலஸ்தீன காசா மக்களுக்கான நிவாரண உதவி பொருட்களுடன், பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சுமார் 500 செயற்பாட்டாளர்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் தொடங்கினர். அந்தப் படகுகளில் சில புதன்கிழமை இரவு பாலஸ்தீனப் பகுதியை எட்டியபோது, இஸ்ரேல் கடற்படையினர் அவற்றைத் தடுத்தனர். அவற்றில் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகும் இருந்தது.

சிரியஸ், அல்மா, அடாரா எனும் படகுகள் காசா கடற்கரைக்கு 80 மைல் தொலைவில் இருந்தபோது, அவற்றை இஸ்ரேல் கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தை அந்தப் படகுகளில் இருந்த செயற்பாட்டாளர்களே சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தினர். அப்போது அவர்கள் “பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும்” என முழக்கமிட்டனர். இதற்கு முன்பும், கடந்த ஜூன் மாதம் காசாவுக்குச் சென்ற நிவாரணப் படகுகளை இஸ்ரேல் தடுத்தது குறிப்பிடத்தக்கது.

“சுமார் 12-க்கும் மேற்பட்ட கப்பல்களில் வந்த இஸ்ரேல் கடற்படையினர் எங்கள் படகுகளைத் தடுத்து, இயக்கத்தை நிறுத்துமாறு தெரிவித்தனர். அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்கச் சொன்னனர். இல்லையெனில் படகுகள் கைப்பற்றப்படும் என்றும் விளைவுகளை நாங்களே சந்திக்க வேண்டும் என்றும் எச்சரித்தனர்” என அமெரிக்கர் கிரேக் ஸ்டாகர் தெரிவித்துள்ளார். அவர் காசாவுக்குச் சென்ற செயற்பாட்டாளர்களில் ஒருவர். இதைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர், “கிரெட்டா தன்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, கிரெட்டா படகின் மேற்புறத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் நெல்சன் மண்டேலாவின் பேரனும், ஐரோப்பிய செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் சிவப்பு நிற லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தனர்.

அடுத்தகட்டத்தில் என்ன நடக்கும் என்பதில் தெளிவு இல்லை. ஆனால், இஸ்ரேலின் நடவடிக்கை இன்னும் சில மணி நேரம் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படகுகள் அஸ்தோது துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து செயற்பாட்டாளர்கள் நாடுகடத்தப்படலாம் என இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “சர்வதேச சட்டத்திற்கு எதிராக இஸ்ரேல் நடக்கிறது. நிவாரண உதவிகளுடன் காசா சென்ற துருக்கி குடிமக்களையும், மற்றவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என துருக்கி வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய அரசுகள், செயற்பாட்டாளர்களின் நிலைமையை நெருங்கிய கவனத்தில் வைத்துள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் 2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தீவிரமடைந்தது. அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான காசா மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது பாலஸ்தீனியர்கள் அல் மவாசி பகுதிக்கு இடம்பெயர வேண்டும் என்று இஸ்ரேல் படைகள் வலியுறுத்தி வருகின்றன. அங்கு மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகள் கிடைக்கும் எனவும் கூறுகின்றனர். இதுவரை காசாவில் இருந்து 4,50,000-க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.

Facebook Comments Box