பிரதமர் மோடி புத்திசாலித்தனமான தலைவர் – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி சமநிலை உடைய சிந்தனையுடன் கூடிய புத்திசாலித்தனமான தலைவராக உள்ளார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழாரம் சூட்டினார்.
இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை எதிர்த்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தார். இதனால் அமெரிக்கா – இந்தியா உறவில் சிக்கல் ஏற்பட்டது. ஐ.நா. பொதுச் சபையில் பேசிய ட்ரம்ப், “இந்தியா, சீனா தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, உக்ரைன் போருக்கு நிதி ஆதரவாகிறது” என குற்றஞ்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற உரையாடலில் அதிபர் புதின் தெரிவித்ததாவது: “இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது அரசியல் நோக்கமல்ல, பொருளாதார நலனுக்காக மட்டுமே. இந்தியா வாங்கவில்லை என்றால் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். இந்திய மக்கள், அரசியல் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளை நுணுக்கமாக கண்காணிப்பார்கள்; ஒருபோதும் தாழ்வு ஏற்க மாட்டார்கள். நான் பிரதமர் மோடியை நன்கு அறிவேன் – அவர் ஒருபோதும் தவறான முடிவை எடுப்பதில்லை. அமெரிக்க வரியால் ஏற்பட்ட இழப்பை, ரஷ்யா எண்ணெய் இறக்குமதி மூலம் இந்தியா சமநிலைப்படுத்திவிடும். அதேசமயம் இறையாண்மையான நாடு என்ற பெருமையும் கிடைக்கும். ரஷ்யா – இந்தியா இடையே எப்போதும் நல்லுறவு மட்டுமே இருந்து வந்துள்ளது.”
புதின் மேலும் கூறியதாவது: “பிரதமர் மோடி என் நம்பிக்கைக்குரிய நண்பர். சமச்சீரான சிந்தனையுடன், தேசநலனுக்காக பாடுபடக் கூடிய அறிவார்ந்த தலைவர். இந்தியாவிலிருந்து மேலும் வேளாண் பொருட்களும் மருந்துகளும் இறக்குமதி செய்ய ரஷ்யா தயாராக உள்ளது. அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு உலகளாவிய பணவீக்கத்தை தூண்டும்; இதனால் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்க வேண்டிய நிலை வரும்.”
மேலும் அவர் குறிப்பிட்டதாவது: “இந்திய திரைப்படங்களை ரஷ்யர்கள் இன்னமும் ஆழ்ந்த அன்புடன் விரும்புகிறார்கள். இந்திய சினிமாவை நாம் மிகவும் நேசிக்கிறோம். ஒரே ஒரு நாட்டின் திரைப்படங்களுக்கு தனி டிவி சேனல் வைத்திருப்பது ரஷ்யா மட்டும்தான் இருக்கலாம். இந்தியா – ரஷ்யா உறவு அரசியல் மட்டுமல்ல, கலாச்சாரமும் மனிதாபிமானமும் இணைந்த ஒன்று. பல இந்திய மாணவர்கள் கல்விக்காக ரஷ்யாவுக்கு வருகிறார்கள்; இந்திய கலாச்சாரத்தையும் மக்களையும் நாங்கள் உளமாற வரவேற்கிறோம்.”
கடந்த காலங்களிலும் புதின், இந்திய திரைப்படங்களின் பிரபலத்தைக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். கடந்த ஆண்டு, “பிரிக்ஸ் நாடுகளில் எதையும் விட இந்திய சினிமா தான் ரஷ்யாவில் அதிகம் பிரபலமாக உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.