ஒரே ட்வீட்… எலான் மஸ்க் நெட்ஃப்ளிக்ஸ் பங்குகளை ஆட்டம் காண வைத்தார்!
தொழிலதிபர் எலான் மஸ்க் ஒரே ட்வீட்டால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தற்காலிகமாக சரிவுக்கு உள்ளாக்கியுள்ளார். இதனால் நிறுவனம் சந்தையில் குறைந்த மதிப்பை எதிர்கொண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடருகள் மூலம் LGBTQ கலாச்சாரத்தை வலியுறுத்துகிறது என அமெரிக்க வலதுசாரி ஆதரவாளர்கள் புகார் விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் தீவிர வலதுசாரி ஆதரவாளர் சார்லி கிர்க் கொல்லப்பட்டார். இதனைப் பின்னர், அனிமேஷன் பட இயக்குநர் ஹாமிஷ் ஸ்டீல் ‘Dead End: Paranormal Park’ தொடரில் சார்லி கிர்கை ‘நாஜி’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் விமர்சனம் தெரிவித்தார். இந்த தொடரில் குழந்தைகள் பார்ப்பது மற்றும் LGBTQ கலாச்சார ஆதரவை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை கிளம்பியது.
ஒரு பயனர், நெட்ஃப்ளிக்ஸ் தனது தொடரில் LGBTQ ஆதரவை வலியுறுத்துகிறது என்பதால் தனது சந்தாவை ரத்து செய்வதாக எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் பதிவு செய்தார். இதை ரீட்வீட் செய்த எலான் மஸ்க், தானும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை ரத்து செய்வதை உறுதி செய்தார்.
இதனால் #CancelNetflix என்ற ஹேஷ்டேக் உலகம் முழுவதும் டிரெண்டாகி, ஆயிரக்கணக்கானோர் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை ரத்து செய்த ஸ்க்ரீன்ஷாட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். மஸ்க் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸை விமர்சித்து, LGBTQ காட்சிகள் மற்றும் தொடருகளை குறித்த கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இதன் எதிரொலியாக, நெட்ஃப்ளிக்ஸ் பங்குகள் கடந்த இரண்டு நாட்களாக மளமளவாக சரிந்து, நிறுவனத்தின் மதிப்பு 507.25 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதனால் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 1.05 சதவீதத்தை இழந்துள்ளது, அதாவது $5.33 பில்லியன் இழப்பு. பொருளாதார நிபுணர்கள், இது நீடித்தால் நிறுவனத்திற்கு கடுமையான நட்டம் வரும் என எச்சரிக்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நெட்ஃப்ளிக்ஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு 128%-க்கும் மேலான லாபத்தை வழங்கியுள்ளன. 2025-ஆம் ஆண்டில் பங்குகள் 30%-க்கும் மேலாக அதிகரித்தாலும், கடந்த மாதம் 4.60% சரிவைப் பெற்றுள்ளது.
எலான் மஸ்க் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இடையிலான விவகாரம் சமூக வலைதளங்களில் LGBTQ, குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் பரபரப்பான விவாதங்களை கிளப்பியுள்ளது. நிபுணர்கள், இந்த சர்ச்சைகள் ஓய்ந்ததும் பங்குகள் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கின்றனர்.