ட்ரம்ப் அமைதி வேண்டுகோளுக்குப் பிறகும் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் பலி
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டதாக அறிவித்திருந்தார்.
எனினும் ஹமாஸ் அமைதி குறித்து மௌனம் காத்த நிலையில், அதற்காக ட்ரம்ப் 3 நாள் அவகாசம் வழங்கினார். அதன் பின்னர் ஹமாஸ் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் அவர், “காசா மீது குண்டுவீச்சை நிறுத்துங்கள்” என இஸ்ரேலை கேட்டுக்கொண்டார்.
ஆனால், ட்ரம்பின் வேண்டுகோளுக்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே, காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஹமாஸ் அமைதி முன்மொழிவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நெதன்யாகுவின் அலுவலகம், “இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ட்ரம்ப் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளோம்” என்று அறிவித்தது.
மேலும், காசா மீது நடைபெறும் தாக்குதல்களை கட்டுப்படுத்த ராணுவத்துக்கு தற்காலிகமாக தாக்குதல் தளர்த்தும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.