கனடா திரையரங்குகளில் தாக்குதல் – இந்திய திரைப்படங்கள் திரையிடல் தற்காலிகமாக நிறுத்தம்!
கனடாவில் இந்திய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்நாட்டு சில திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விளைவாக ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 உட்பட பல இந்திய திரைப்படங்களின் திரையிடல் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், திரைப்படங்களின் வசூலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்புடையவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வேறு திரையரங்குகளில் தீவைப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து அங்குள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்திய படங்களின் திரையிடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனடா காவல்துறை தெரிவித்ததாவது:
“காந்தாரா: சாப்டர் 1, தே கால் ஹிம் ஓஜி உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகள் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 தேதிகளில் மர்ம நபர்களால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டன. அவர்கள் காரில் வந்து தீ வைத்து, துப்பாக்கியால் சுட்டு சேதம் விளைவித்தனர்.*” என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. ஆனால், காவல்துறை இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.