இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இடிந்த பள்ளி கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஜாவா மாநிலத்தின் சிடோர்ஜோ நகரில் அமைந்திருந்த அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர். மீட்புப்படையினர் கடந்த ஒரு வாரமாக இடிபாடுகளை அகற்றி, சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பேரிடர் மீட்பு நிறுவனத்தின் தகவலின்படி, நேற்று (அக்டோபர் 5) வரை சுமார் 80% இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. இதுவரை 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 4 பேரின் உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டதால், இறப்பு எண்ணிக்கை 54 ஆக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 13 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கருதப்படுவதால், அவர்களைத் தேடும் பணி இன்று (அக்டோபர் 6) முடிவடையும் என பேரிடர் மீட்பு அமைப்பின் துணை அதிகாரி புடி இரவான் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்குக் காரணமாக, பள்ளி கட்டிடத்தின் அடித்தளம் பலவீனமடைந்த நிலையில் மேல்தளங்களில் நடந்த கட்டுமானப் பணிகள் குறிப்பிடப்படுகின்றன. இதனால் கட்டிடம் தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது என்று அதிகாரிகள் விளக்கினர்.
மத விவகார அமைச்சகத்தின் தரவின்படி, இந்தோனேசியா முழுவதும் சுமார் 42,000 இஸ்லாமிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றில் வெறும் 50 பள்ளிகளுக்கே கட்டிட அனுமதிகள் உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டோடி ஹாங்கோடோ தெரிவித்தார். விபத்து நடந்த அல் கோசினி பள்ளிக்கு உரிய கட்டிட அனுமதி இருந்ததா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.