“4 லட்சம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு பாகிஸ்தான்” – ஐ.நா.வில் இந்தியாவின் கடும் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தின் போது, “தன் நாட்டிலேயே 4 லட்சம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது பாகிஸ்தான்” என இந்தியா கடுமையாக குற்றம் சாட்டியது.
ஐ.நா.வில் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி சைமா சலீம், ஜம்மு காஷ்மீர் குறித்து இந்தியாவை குற்றம் சாட்டி உரையாற்றினார். அதற்கு பதிலளித்த இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக, குறிப்பாக எங்கள் ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை கேட்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த துறையில் எங்கள் நாட்டின் சாதனை கறையற்றது. ஆனால் தன் சொந்த மக்களுக்கு எதிராக குண்டுவீசி இனப்படுகொலை நடத்திய நாடு, இன்று உலகை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது.
1971 ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சர்ச்லைட்’ நடவடிக்கையின்போது, வங்கதேச அரசின் கணக்குப்படி 30 லட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 4 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தனர். இத்தகைய திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்த நாடே பாகிஸ்தான். இப்போது அது எத்தகைய பிரச்சாரம் செய்கிறது என்பதை உலகமே காண்கிறது” என்று தெரிவித்தார்.
பெண்கள் மீது ஆயுத மோதல்களின் தாக்கத்தைத் தவிர்க்கும் நோக்கில் 2000 ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன் 25ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விவாதத்தில், பாகிஸ்தான் இந்தியாவை குறிவைத்து பேசியதைத் தொடர்ந்து, இந்தியா வலுவான பதிலடி வழங்கியது.