‘இப்படியொரு பயணத்துக்கான சூழல் உருவானதே ஓர் அவலம்’ — கிரெட்டா தன்பெர்க் வேதனை
“இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஒரு நாடு தடுக்கையில், அவர்களைச் சென்றடைந்து உதவ கடல் வழியாகப் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவானதே மிகப் பெரிய அவலமாகும்,” என்று சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனின் காசா பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் அனுப்பும் நோக்கில், கிரெட்டா தன்பெர்க் உட்பட சுமார் 500 சமூக செயற்பாட்டாளர்கள், 50 படகுகளில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து புறப்பட்டனர். ஆனால் இஸ்ரேல் கடற்படை அந்த படகுகளை கடலில் இடைமறித்து, பயணிகளை கைது செய்தது.
பின்னர், கைது செய்யப்பட்டவர்களில் பலரை படிப்படியாக நாடுகடத்தினர். அதில் கிரெட்டா தன்பெர்க் உட்பட 160 பேர் ஞாயிற்றுக்கிழமை கிரீஸுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஏதென்ஸ் விமான நிலையம் வந்தபோது, சமூக செயற்பாட்டாளர்கள் அவர்களை ஆரவாரமாக வரவேற்றனர்.
அப்போது பேசிய கிரெட்டா கூறியதாவது:
“காசா மக்களுக்கு கடல் வழியாக நிவாரணம் சென்றடையாமல் தடுக்க இஸ்ரேல் மனிதமற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த முயற்சியை எதிர்த்துப் போராடும் மிகப் பெரிய முயற்சிதான் ‘ஃப்ளோட்டிலா’ பயணம். ஆனால் இப்படிப்பட்ட மனிதாபிமான முயற்சிக்கே உலகம் மவுனமாக இருப்பது ஒரு பெரும் அவலம். இஸ்ரேலின் இனஅழிப்பை தடுக்க உலக அரசுகள் முன்வர வேண்டும்; ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் கூட செயலில் ஈடுபடவில்லை.” என்றார்.
விமான நிலையம் வந்தபோது கிரெட்டா பாலஸ்தீனக் கொடியை கையில் ஏந்தி, “பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும் — ஃப்ளோட்டிலா வாழ்க!” என்று முழங்கினார்.
இஸ்ரேல் காவலில் இருந்தபோது கிரெட்டாவை தாக்கியதாகவும், அவரை இஸ்ரேல் கொடியை முத்தமிட நிர்பந்தித்ததாகவும் சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதைப்பற்றி கிரெட்டா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
மற்றொரு செயற்பாட்டாளர் யாஸ்மின் அகார் கூறியதாவது:
“எங்களை மிருகங்களைப் போல நடத்தினார்கள். தாக்கினர், தூங்க விடவில்லை. முதல் 48 மணி நேரம் உணவு, சுத்தமான தண்ணீர் எதுவும் கிடைக்கவில்லை,” என்றார்.
இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் முழுமையாக மறுத்துள்ளது. கிரெட்டா தன்பெர்க் உட்பட 170க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் கிரீஸ் மற்றும் ஸ்லோவேகியா வழியாக நாடுகடத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.