காசா அமைதி ஒப்பந்தத்துக்கு வாழ்த்து: ட்ரம்ப், நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்வைத்த காசா அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், காசா பகுதியில் முதற்கட்ட தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வர உள்ளது.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ட்ரம்ப்புடன் தொலைபேசியில் பேசி, இந்த வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “என் நண்பர் அதிபர் ட்ரம்ப்புடன் பேசி, காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் விவாதித்தோம். வரும் வாரங்களில் நெருங்கிய தொடர்பில் இருந்து இருநாட்டு உறவை வலுப்படுத்த ஒப்புக்கொண்டோம்,” என்று பதிவிட்டார்.

அதேபோல், தனது மற்றொரு பதிவில், “என் நண்பர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசி, காசா அமைதி ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு வாழ்த்து தெரிவித்தேன். பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசா மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை நாங்கள் வரவேற்கிறோம். எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை மீண்டும் வலியுறுத்தினோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, அதிபர் ட்ரம்ப் 20 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

அந்த திட்டத்தின் படி,

  • காசா மீண்டும் கட்டியெழுப்பப்படும்,
  • ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும்,
  • பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர்,
  • உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும்,
  • பின்னர் இஸ்ரேல் படைகள் படிப்படியாக காசாவில் இருந்து வெளியேறும்.

மேலும், காசாவை நிர்வகிக்க உள்ளூர் தலைவர்களால் அமைக்கப்படும் புதிய நிர்வாக குழு பொறுப்பேற்கும். ஹமாஸ் தலைவர்களுக்கு அதில் இடமில்லை. இந்த குழு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தலைமையிலான சர்வதேச குழுவின் வழிகாட்டுதலில் செயல்படும்.

காசாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும். சர்வதேச முதலீடுகள் அதிகரிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். காசா பாதுகாப்பை “இன்டர்நேஷனல் செக்யூரிட்டி படை (ISF)” மேற்கொள்ளும்.

இந்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன.

Facebook Comments Box