ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கைக்கு 2025 இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுகிறது

2025ஆம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு, ஹங்கேரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை அவர்களுக்கு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது. பேரழிவுகள் மற்றும் கலவரங்களின் மத்தியில் கலைக்கான நம்பிக்கையையும் சக்தியையும் வெளிப்படுத்தும் ஆழமான கண்ணோட்டத்துடன் கூடிய சிறந்த இலக்கிய பங்களிப்புக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ருமேனியா எல்லையோர நகரத்தில் பிறந்த லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை, 1985ஆம் ஆண்டு ‘சாட்டான்டாங்கோ’ என்ற தனது முதல் நாவலை வெளியிட்டார். அதிலிருந்து அவர் ஹங்கேரியின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக உயர்ந்தார். சமீபத்தில் அவர் எழுதிய ‘ஹெர்ஷ்ட் 07769’ என்ற நாவல், நாட்டில் நிலவும் சமூக கலக்கங்களை நுட்பமாக சித்தரித்ததாக பல விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. அவர் திறமையான திரைக்கதை ஆசிரியராகவும் அறியப்படுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் சிறந்த சாதனையாளர் தேர்வு செய்யப்பட்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நாளை (அக்டோபர் 10) அறிவிக்கப்படவுள்ளது; பொருளாதாரத்துக்கான பரிசு அக்டோபர் 13ஆம் தேதி அறிவிக்கப்படும்.

அனைத்து நோபல் விருதுகளும் ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10ஆம் தேதி வழங்கப்படும். ஒவ்வொரு பரிசும் தங்க பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.03 கோடி) பரிசுத் தொகையையும் உடையதாகும்.

Facebook Comments Box