இட்லி கொண்டாட கூகுள் டூடுல் வெளியீடு – ஆனால் இன்று உலக இட்லி தினமில்லை!
தென்னிந்தியாவின் பிரபல காலை உணவான இட்லியை சிறப்பித்துக் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. பொதுவாக, உலக இட்லி தினம் மார்ச் 30 அன்று இருப்பதால், அந்த நாளில் தான் டூடுல் வரும் வழக்கம். ஆனால் அக்.11 அன்று இது வெளியிடப்பட்டதால் கவனம் பெற்றுள்ளது.
கூகுள் டூடுல்கள் முக்கிய மனிதர்கள், தினங்கள், நிகழ்வுகள், கலாச்சாரங்களை நினைவூட்டவோ அல்லது பாராட்டவோ உருவாக்கப்படுகின்றன. இந்த முறையில் இன்று தென் இந்திய உணவு கலாச்சாரமான இட்லியை கொண்டாடும் விதமாக டூடுல் வெளியிடப்பட்டது.
டூடுலில் இட்லி, இட்லி மாவு, வேகவைத்த இட்லி, சட்னி, சாம்பார், இட்லிப் பொடி என அனைத்தும் அலங்காரமாக காட்சியளிக்கின்றன. மேலும், அது வாழை இலையில் காட்சியமைக்கப்பட்டுள்ளது.
கூகுள் டூடுல் தொடர்பாக கூறியது:
“இன்றைய அதிகாரபூர்வ டூடுல் தென் இந்திய உணவான இட்லியை கொண்டாடுகிறது. அரிசி, உளுந்து கலந்து அரைத்து நொதிக்கவைத்த மாவில் தயாரிக்கப்படும் இது ஒரு பாரம்பரிய பதார்த்தமாகும்.”
அக்.11 அன்று மற்ற எந்த நினைவுநாள் அல்லது கொண்டாட்டமும் இல்லாத நிலையில், உலகம் முழுவதும் பரவிய இட்லி உணவுக் கலாச்சாரத்தை சிறப்பிக்க கூகுள் இந்த டூடுலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.