நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி ஜூன் 5 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை, சட்டவிரோதமாக செயல்படும் 793 இணையதளங்களில் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த படம் இணையதளங்களில் மற்றும் கேபிள் தொலைக்காட்சி சேனல்களில் சட்டவிரோதமாக வெளியிடப்படுவதை தடுக்க, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி விசாரணை செய்தார். அப்போது, நிறுவனத்தின் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், “‘தக் லைஃப்’ திரைப்படம் 3500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இது இணையதளங்கள் மற்றும் கேபிள் சேனல்களில் தவறாக வெளியானால் படத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும்” என வலியுறுத்தினார்.
இதனை ஏற்று, பிஎஸ்என்எல் உள்ளிட்ட இணைய சேவை மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு ‘தக் லைஃப்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடக் கூடாது என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.