சின்னமுட்டத்தில் மீனவர்கள் கடல் முற்றுகை – கடலையும் கடற்கரையையும் காக்க கோரிக்கை

குமரியில் கடலையும் கடற்கரையையும் சேதப்படுத்தும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டாம் என வலியுறுத்தி, சின்னமுட்டம் பகுதியில் இன்று (ஜூன் 11) மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி அருகே ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் அகழ்வு, கடல் காற்றாலை அமைப்புகள் மற்றும் அதிகமான கப்பல் போக்குவரத்தால் ஏற்படும் விபத்துகள் ஆகியவைகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், கடல் வளங்களையும் அழிக்கக்கூடியவையாக உள்ளன. இதனை எதிர்த்து, சின்னமுட்டம் துறைமுக பகுதியில், மீனவர்கள் தங்கள் படகுகளுடன் குடும்பங்களுடன் சேர்ந்து கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீன்பிடிக்க செல்வதைத் தவிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போராட்டத்தின்போது, “கடலையும் மீனவர்களையும் காப்பாற்றுங்கள்!”, “கடலை அழிக்காதீர்கள்!”, “கப்பல் விபத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொரு மீனவருக்கும் ஒரு கோடி இழப்பீடு அளிக்க வேண்டும்!” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டக்காரர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:

  • குமரி தெற்கு கடற்பகுதியில் 27155 சதுர கி.மீ. பரப்பளவில் திட்டமிடப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
  • தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதியில் உள்ள காற்றாலை திட்டங்களை நிறைவேற்றக் கூடாது.
  • கொல்லம் முதல் மன்னார் வளைகுடா வரை உள்ள அணுக் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • கிள்ளியூர் தாலுகாவில் உள்ள 1144 ஹெக்டேர் நிலத்திலான அணுக் கனிம மணல் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும்.
  • எதிர்பாராத கப்பல் விபத்தால் பாதிக்கப்படும் மீனவர்களின் குடும்பத்திற்கே குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த போராட்டத்திற்கு சின்னமுட்டம் ஊர் நிர்வாக குழுவினர் தலைமையேற்றனர். துணைத் தலைவர் கமலஸ், செயலாளர் ஆரோக்கியம் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், விசைப்படகு சங்கம், நாட்டுப்படகு சங்கம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box