விடுபட்ட பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மணிமேகலை விருதுகளை வழங்கியதோடு, 33,312 குழுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3,76,443 உறுப்பினர்களுக்கு ரூ.3,134.21 கோடி அளவிலான வங்கிக் கடன்களை வழங்கும் திட்டத்தையும் துணை முதல்வர் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சுயஉதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட ‘மதி’ என்ற சின்னத்தையும் வெளியிட்டு, அவர்களால் தயாரிக்கப்பட்ட செக்கு கடலை எண்ணெயை மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.
பின்னர் உரையாற்றிய அவர்,
1989-ல் முதன்முறையாக, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி மகளிர் சுயஉதவிக் குழுக்களைத் தொடங்கினார் என்பதை நினைவுகூர்ந்தார். அத்துடன், சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு ஊக்கமாக மணிமேகலை விருதுகளை வழங்கியதாக கூறினார்.
முந்தைய அதிமுக ஆட்சியில், இந்த விருதுகள் வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய திமுக ஆட்சியில் மீண்டும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மகளிர் முன்னேற்றத்திற்கு தினமும் பல திட்டங்களை திமுக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் பயணம் செய்யும் போது, சிறப்பாக செயல்படும் குழுக்களை சந்தித்து, அவர்களது பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிவதாக கூறினார்.
அவர்கள் கோரிக்கைகள் முதல்வரிடம் சென்றதும், பட்டா 6 மணி நேரத்தில், வீட்டு ஒதுக்கீடு 4 மணி நேரத்தில் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும், சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகள் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்ல, விரைவில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
2011 முதல் 2021 வரை, சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், தற்போதைய திமுக அரசு, கடனுதவி இலக்கை நிர்ணயித்து, கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1.05 லட்சம் கோடி கடன் பெற உதவியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவிலேயே 9.69% வளர்ச்சியுடன் தமிழகம் முன்னிலையில் இருப்பதற்குப் பெண்கள் பெரிய பங்கு வகிக்கின்றனர் என்றும், திமுக அரசு மகளிர் நலனுக்காக செயல்படும் வரலாற்றில் சிறந்த அரசு என்ற பெருமையை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுயஉதவிக் குழுக்களின் பெண்கள், திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தூதர்களாக செயல்படவேண்டும் என்றும், திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது,
“மகளிர் உரிமைத்தொகை” குறித்தும், முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்ததாகவும், விடுபட்டவர்களுக்கு வழங்குதல் தொடர்பான ஆரம்ப வேலைகள் தொடங்கியுள்ளன என்றும் தெரிவித்தார்.
முந்தைய முறையைப் போல, சரியான திட்டமிட்ட விதமாக, தேதி அறிவித்த பிறகு, உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் உறுதி செய்தார்.
முன்னதாக, அரங்கு வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுயஉதவிக் குழுக்களின் பொருட்களை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின், குழு உறுப்பினர்களுடன் உரையாடினார்.
இவ்விழாவில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்.பி. தயாநிதி மாறன், ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவத்தின் மேலாண் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.