மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் பெண்களுக்கு வசதியாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பேட்டரி கார் சேவை தொடக்கம்

மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில், பேட்டரி கார் சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை அமர்விற்கு பேருந்தில் வருபவர்கள், மேலூர் முக்கிய சாலையில் இறங்கி சுமார் அரை கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த சிக்கலை தீர்க்கும் நோக்கத்தில் புதிய பேட்டரி கார் சேவை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

சேவைக்காக ரூ.15 லட்சம் செலவில் இரண்டு பேட்டரி கார்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காரிலும் ஓட்டுநரை தவிர 6 பயணிகள் செல்ல முடியும்.

இந்த சேவையை, மதுரை அமர்வின் நிர்வாக நீதிபதி எஸ். எம். சுப்புரமணியம் அவர்கள் இன்று காலை தொடங்கி வைத்தார். கூடுதல் பதிவாளர் ஜெனரல் அப்துல் காதர் மற்றும் நிர்வாக பதிவாளர் பிரேம் குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இரு பேட்டரி கார்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் முக்கிய வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த பேட்டரி கார் சேவையை, நீதிமன்றத்துக்கு வருகிற மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சேவை நாட்களில், காந்தி சிலை அருகிலுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு வாயிலுக்கு வரையிலும், உயர்நீதிமன்ற பிரதான வாயிலில் இருந்து இந்த கார்கள் இயக்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

Facebook Comments Box