ராமாபுரம் அருகே மெட்ரோ உயர்மட்டப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – மெட்ரோ நிறுவனம் விசாரணை அறிவிப்பு

ராமாபுரம் அருகிலுள்ள மெட்ரோ உயர்மட்ட பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில், இணைப்பு பாலம் இடிந்து விழுந்து துயரமான விபத்தொன்று நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இப்படிச் சொல்கிறது:

“மணப்பாக்கம் பகுதியில், எல் & டி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அருகே, சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த இரண்டு தூண்கள் இணைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளை அகற்றும் பணிகள் மெட்ரோ நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். விபத்தின் காரணங்களை கண்டறியும் நோக்கில் விரிவான விசாரணை விரைவில் நடைபெறும்.”

அத்துடன், “இந்தச் சம்பவத்தின் போது இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்படுகிறது. வாகனத்தில் பின்னால் வேறு ஒருவர் இருந்தாரா என்பது குறித்து கூடுதல் விசாரணை நடக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது?

சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 44.6 கிலோமீட்டர் நீளமுள்ள 5வது வழித்தடத்தில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் போரூர் முதல் சென்னை வர்த்தக மையம் வரையிலான பகுதியில் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

இந்த நிலையில், ராமாபுரம் அருகே வியாழக்கிழமை இரவு, உயர்மட்டப்பாதையில் இணைப்பு பாலம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய ஒருவர் உயிரிழந்ததாக ஆரம்பத்திலேயே தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சரிந்த பாலத்தை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Facebook Comments Box