தமிழகம் முழுவதும் நேற்றைய நாளில் நடைபெற்ற லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) மூலம், 1.12 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.631 கோடியே 80 லட்சத்து 27,703 நிவாரணமாக வழங்கப்பட்டது.

நாட்டின் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக தீர்க்கும் நோக்கில், வருடத்திற்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் நடைபெறுகிறது. இதற்கிணங்க, தமிழ்நாட்டில் இந்த நிகழ்வு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு கே.ஆர். ராமின் மேற்பார்வையில், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி ஆர். சுப்பிரமணியனின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் பி.பி. பாலாஜி, வி. லட்சுமி நாராயணன், பி. தனபால் மற்றும் முன்னாள் நீதிபதிகள் எம். ஜோதிராமன், எம். ஜெயபால், பி. கோகுல்தாஸ் ஆகியோரின் தலைமையில் 6 அமர்வுகள் நடைபெற, மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். ஸ்ரீமதி, ஆர். விஜயகுமார், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகள் நடத்தப்பட்டன.

மேலும், மாவட்ட மற்றும் தாலுகா நிலைகளில், மொத்தம் 499 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த அமர்வுகளின் முன்னிலையில் பட்டியலிடப்பட்ட 1,12,561 வழக்குகள் இரு தரப்பினருடனான சமரச பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தீர்க்கப்பட்டன.

இதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ.631 கோடியே 80 லட்சத்து 27,703 இழப்பீடு வழங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் செயலர் எஸ். பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

Facebook Comments Box