யோகா பயிற்சியினால் உடல்நலத்துடன், மன அமைதி மேம்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் நேற்று 11-வது ஆண்டு மெகா யோகா நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் ஆளுநர் யோகா பயிற்சியில் நேரடியாக பங்கேற்று, 47 யோகாசனங்களின் பெயர்களை கூறி மாணவர்களுக்கு விளக்கமாக செய்து காட்டினார். மேலும், உடற்பயிற்சி மற்றும் தண்டால் பயிற்சிகளில் மாணவர்களுடன் இணைந்து கலந்துகொண்டார். இதில், அவர் தொடர்ச்சியாக 51 தண்டால்களை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பின்னர் தனது உரையில் ஆளுநர் கூறியதாவது: “யோகாசனங்களை அடிக்கடி செய்தால் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படும். யோகாவால் உடல்நலத்துடன், மனநலனும் மேம்படுகிறது. இன்று உலகம் முழுவதும் யோகாவை நடைமுறைப்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. யோகா மதங்கள் மற்றும் எல்லைகளைத் தாண்டி பலருக்கும் பயனளிக்கிறது” என்றார்.

இந்த யோகா விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 10,000-க்கும் அதிகமான மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

வேலம்மாள் கல்விக் குழும தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தனது உரையில், “ஒரு காலத்தில் எனக்கு முதுகு வலி ஏற்பட்டது. அந்த நேரத்தில் சில யோகாசனங்களை செய்தேன். அதன் மூலம் வலி குறைந்து நலம் திரும்பியது. இதன் மூலம் யோகா மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். நம் உடலும் மனதும் நலமடைய யோகாவை நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்றார்.

Facebook Comments Box