கண்டதேவியில் தேரோட்டம்: “சாதிய பாகுபாடு இல்லை” – அரசு விளக்கம், நீதிமன்றம் கண்டனம்

சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் உள்ள ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு கோயில் தேரோட்டத்தில் சில நாட்டார் சமூகத்தினர் அதிகளவில் கலந்து கொண்டு தேரின் வடத்தை பிடித்ததால் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடமில்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறி, அப்பகுதியில் வசிக்கும் கேசவமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்றும், தேரை அனைத்து சமூகத்தினரும் சமமாக இழுக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டு மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “தமிழக கோயில் விழாக்களில் சாதிய பாகுபாடு எதுவும் இல்லை. அனைத்து சமூகங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. கண்டதேவியில் அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். “தமிழகத்தில் எங்கும் சாதிய பாகுபாடுகள் இல்லை எனக் கூற முடியாது. கல்வியறிவு அதிகரித்தாலும் சாதிய பாகுபாடு இன்னும் தொடர்கின்றது. கோயில் விழாவில் பாகுபாடு இல்லையெனில் அதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்” எனக்கூறி, விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Facebook Comments Box