ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை – அறநிலையத் துறை நடவடிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் அர்ச்சகர் மற்றும் கும்பாபிஷேக விழாவுக்காக அழைக்கப்பட்டிருந்த சில அர்ச்சகர்கள், வீட்டில் ஆபாசமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, அறநிலையத் துறை நடவடிக்கையை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் கோயில் பணிகளில் இருந்து நீக்கப்பட்டு, பூஜை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த ஜூன் 16-ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பதன் மூலம் தொடங்கியிருந்தன. இந்நிலையில், உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் மற்றும் பிறர் வீடுகளில் ஆபாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அர்ச்சகரின் நடத்தை குறித்து கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரனின் மகன் சபரிநாதன் போலீசில் புகார் அளித்ததோடு, இந்து முன்னணி சார்பிலும் முறையீடு செய்யப்பட்டது. புகாரில், அர்ச்சகர் சுந்தர் மதுவில் இருந்தபோது பணியில் ஈடுபட்டதை மருத்துவ சோதனை உறுதி செய்ததாகவும், போலி ரசீதுகள் மூலம் நிதி மோசடி நடைபெற்றதாகவும், செயல் அலுவலர் உட்பட சிலர் நேரடி ஈடுபாடுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கணக்கர் மற்றும் பணியாளர் கார்த்திக் திருப்பணியில் மோசடியில் ஈடுபட்டதாகவும், அலுவலகத்தில் மது அருந்தும் வீடியோ வெளியானதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதுதொடர்பாக தக்கார் சர்க்கரையம்மாள் தெரிவித்ததாவது, “கோமதி விநாயகம் உள்ளிட்ட நான்கு அர்ச்சகர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கோயில் பணிகளில் தலையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் சுந்தர் மீது கும்பாபிஷேக நிகழ்ச்சிக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும். துறை சார்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார்.

இதற்கிடையே, ஆபாசமாக நடனமாடிய அர்ச்சகரை தாக்கியதாக கூறப்படும் காளிராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments Box