பெட் ஸ்கேன் வசதி: 4 மருத்துவமனைகளுக்கு அரசு ஒப்புதல்

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளில் புற்றுநோயை கண்டறியும் “பெட் ஸ்கேன்” வசதி அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த வசதி, கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் காஞ்சிபுரம் காரப்பேட்டை அண்ணா புற்றுநோய் மையத்தில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.

அதையடுத்து, கிண்டி, திருச்சி, விழுப்புரம், திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதியை தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆய்வில் திருவள்ளூர் மருத்துவமனையில் இத்தகைய வசதி அமைக்கத் தேவையான கட்டமைப்பு இல்லையென்று தெரியவந்தது.

மாற்றாக, திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அங்கு இது கொண்டுவரப்படும்.

இந்த திட்டத்திற்கு தமிழக மருத்துவப் பணிகள் கழகம் பரிந்துரை அளித்தது. அரசு நிதிசுமை ஏற்காமல், தனியார் பங்களிப்புடன் பெட் ஸ்கேன் வசதி அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கொள்முதல் நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ள வழிகாட்டப்பட்டுள்ளது.

Facebook Comments Box