தொழிற்சாலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் அவசியம் எனத் தொழில்துறை செயலாளர் அருண்ராய் கூறினார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஏற்பாட்டில், ரசாயன தொழிற்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில தொழில்துறை செயலாளர் வி. அருண்ராய் கூறியதாவது:

“தமிழகத்தில் ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டு தொழில்துறைகளை விரிவாக்குவது அல்ல; மாநிலம் முழுவதும் தொழில்மயமாக்கம் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட ரசாயன உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் தமிழகம் 6 சதவீத ரசாயனப் பொருட்களை தயாரித்து வருகிறது.

ரசாயன தொழிற்சாலைகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களில் மற்றும் தொழிற்சாலை நிர்வாக தரப்பிலும் சில குழப்பங்கள் காணப்படுகின்றன. இதற்குத் தீர்வாக, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளை அல்லாது, உள்ளூர் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். தொழிற்சாலைகளில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை புரிந்து செயல்பட வேண்டும்.

இதனைத்தவிர பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த, நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக பயன்படுத்துவது மிக முக்கியம். தமிழக அரசு தொழிற்சாலைகளுடன் இணைந்து செயல்பட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகிறது. அரசுக்கு தேவைகள் இருந்தால் தயங்காமல் அணுகலாம். அனைவரும் இணைந்து 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் ஜி.எஸ்.கே. வேலு, திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ரம்யா பரத்ராம், சிபிசிஎல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எச். சங்கர் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box