பகுதி நேர வேலை என்ற பெயரில் ரூ.4.62 லட்சம் மோசடி – பெங்களூருவை சேர்ந்த பெண் கைது
பகுதி நேர வேலை வாய்ப்பு என்று கூறி, ரூ.4.62 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் கர்நாடகாவைச் சேர்ந்த லில்லி புஷ்பா (27).
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி (26) மண்ணடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், லட்சுமியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு பகுதி நேர வேலைக்கு உரிய லிங் அனுப்பப்பட்டது. அந்த லிங்கை கிளிக் செய்தவுடன், ஒரு பெண் தொடர்பு கொண்டு, லட்சுமிக்கு சில வேலைகளை வழங்கினார்.
இந்த வேலைகளை முடித்ததற்காக லட்சுமிக்கு சிறிய அளவில் லாபம் கிடைத்தது. இதனால், மேலும் அதிக லாபம் ஈட்டும் நம்பிக்கையில், அந்த பெண் சொன்ன வங்கி கணக்கில் லட்சுமி ரூ.4,62,130 அனுப்பினார். ஆனால் அதற்குப் பிறகு எந்தவிதமான பணமும் அவருக்குக் கிடைக்கவில்லை.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி, கிழக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கு, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றின் ஐபி விவரங்களை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதன் மூலம், கர்நாடகாவைச் சேர்ந்த லில்லி புஷ்பா என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.