ரயில் கட்டண உயர்வு குறித்து இப்போதைக்கு ஆலோசனையே நடைபெறுகிறது; நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா இன்று (ஜூன் 27) காஞ்சிபுரத்திற்கு வந்தார். அவரை வரவேற்க பாஜக நிர்வாகிகளும், ரயில்வே துறையின் அதிகாரிகளும் இருந்தனர். அவர் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புதிய ரயில்நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்நிலையின் தற்போதைய சூழ்நிலை மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டு அறிந்தார்.

அப்போது, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு, தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு ரயில்வே வாயில் திறக்கப்படாமல் இருப்பதால், மக்கள் அதிக தூரம் சுற்றிப் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர். இதற்கான மாற்றாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் எனக் கோரினர். இந்த மனுவை அமைச்சர் ஏற்றுக்கொண்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பரந்தூரில் அமைக்கப்பட உள்ள விமான நிலையத்துடன் ரயில் சேவை இணைப்பது குறித்த திட்டம் ஆய்வில் உள்ளது. அதுபோலவே, ரயில் கட்டண உயர்வு பற்றியும் தற்போது ஆலோசனை மட்டுமே நடைபெற்று வருகிறது; இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை,” எனத் தெரிவித்தார்.

பின்னர், அவர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலும், காமாட்சி அம்மன் கோயிலும் சென்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார். அவருடன் ரயில்வே அதிகாரிகள், பாஜக மாவட்டத் தலைவர் ஜெகதீசன் மற்றும் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box