சிறுபான்மை பள்ளியில் உருது ஆசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீடு வழக்கு அபராதத்துடன் நிராகரிப்பு
திருப்பத்தூரை சேர்ந்த மதரஸா-இ-அசாம் என்ற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் உள்ள ‘உருது’ பாட ஆசிரியர் பணிக்கான நியமனத்தில், ஹாஜிரா என்ற ஆசிரியை 2022 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதவில்லை என்பதற்காக 2023 ஆம் ஆண்டு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவரின் நியமனத்துக்கு ஒப்புதல் மறுத்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அந்த விசாரணையில், ஆசிரியர் தகுதித் தேர்வு விதிமுறைகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் கூறி, ஹாஜிராவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என 2023 மார்ச்சில் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பிற அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டைக் கேட்டு விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் கே. சுரேந்தர் ஆகியோர், இதுபோன்ற வழக்குகளில் ஏற்கனவே நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பு வழங்கியிருப்பதை குறிப்பிட்டு, தற்போதைய வழக்கை முக்கியத்துவமின்றி தொடர்ந்ததற்காக ரூ.1,00,000 அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இந்த அபராதத் தொகை நான்கு வாரங்களுக்குள் பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தத் தொகையை, ஒப்புதல் மறுத்த உத்தரவை பிறப்பித்த அதிகாரியிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.