நாகை அருகே தாயின் உடலை சாக்கு மூட்டையில் வீசிய மகன்கள் – பரிதாபம் கிளப்பும் வறுமைச் சூழ்நிலை
நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் அருகே, பொருளாதார வசதியின்மையால் வயோதிப தாயின் உடலை அடக்கம் செய்ய முடியாமல், அவரது மகன்கள் சாக்கு மூட்டையில் கட்டி தைலமரத் தோப்பில் வீசிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காந்திமகான் கடற்கரை சாலையில் உள்ள ஒரு தோப்பில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சாக்கு மூட்டையை திறந்தபோது, அதில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது.
பின்னர் சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணை மூலம், அந்த உடல் வேளாங்கண்ணி ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த உசேனின் மனைவி மும்தாஜ் (வயது 75) என்பதும், அவர் சில நாட்களுக்கு முன் காலமானதும் கண்டறியப்பட்டது.
உசேன் மற்றும் மும்தாஜ் தம்பதிகளுக்கு சையது (45), சுல்தான் இப்ராஹிம் (43) ஆகிய மகன்களும், ஜீனத்தம்மாள் (54) என்ற மகளும் உள்ளனர். மூவரும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தின் வாழ்வாதாரம் உசேனின் மாத வருமானத்தையே சார்ந்திருந்தது. ஏப்ரல் மாதம் உசேன் உயிரிழந்ததையடுத்து, மும்தாஜும் சில நாட்களில் இயற்கை எய்தியதாக தெரிகிறது.
அவரது உடலை அடக்கம் செய்ய போதிய பணம் இல்லாததால், சையது மற்றும் சுல்தான் இப்ராஹிம் இணைந்து தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, அந்த தோப்பில் வீசியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.