சட்டவிரோதமாக நிலத்தடி நீரை வணிக நோக்கில் எடுத்துவிற்பவர்கள்மீது குற்றவழக்குப் பதிவு செய்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் அழகாபுரியைச் சேர்ந்த விடியல் வீர பெருமாள் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, மீசலூர், காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல மினரல் வாட்டர் நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு விற்பனை செய்து வருகின்றன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சில நிறுவனங்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி, அதிகளவில் தண்ணீரை எடுத்துப் பணம் சம்பாதித்து வருகிறன. இதனால், மாவட்டத்திலுள்ள சிறிய நீரோடைகள், விவசாயக் கிணறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்வளங்கள் வற்றுவதற்கு காரணமாகியுள்ளது. கோடை பருவம் தொடங்கிவிட்ட நிலையில், குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல், சில நிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்காக நிலத்தடி நீரை சுரண்டி வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இவ்விதமாக சட்டவிரோதமாக நிலத்தடி நீரை வணிக நோக்கில் சுரண்டும் தனியார் நிறுவனங்கள் மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கைகள் எடுத்து, அவர்களிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி.மரிய கிளாட் ஆகியோர் அமர்வில் விசாரித்தனர். மனுதாரரின் சார்பில் வழக்கறிஞர் ஆர். அழகுமணி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை தடுக்கும் வகையில் அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொதுமக்கள் நலனையும், நீர்வளத்தின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அரசு விரைவாக செயல்பட வேண்டும். இதற்காக வழிகாட்டுதல்களும் மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பாக, கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். இதில் பிழை ஏற்படும் பட்சத்தில், பெரியளவில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
எனவே, நிலத்தடி நீரை சட்டவிரோதமாக வணிக நோக்கில் பெறும் நடவடிக்கைகளை உடனடியாகத் தடுக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி, சட்ட மீறல்களில் ஈடுபடுபவர்கள்மீது குற்றவழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.