“அஜித் குமார் கொலையை ‘என்கவுன்டர்’ எனும் வார்த்தைக்குள் ஒளிக்க முடியாது. இது அரசின் பயங்கரவாதம். இந்த அரச பயங்கரவாதத்தை தீவிரமாக எதிர்த்து வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. திருமாவளவன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள மடப்புரத்தில், போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவரது புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“அஜித் குமாரை போலீசார் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தது ஒரு மிகப் பெரிய கொடூரம். இந்த சம்பவத்தில் ஐந்து காவலர்களை கைது செய்திருப்பது ஓர் ஆறுதல் அளிக்கும் செயல் என்றாலும், இது ஒருபோதும் மாறாத மனவேதனையை ஏற்படுத்துகிறது.
இந்த வகை காவல் விசாரணையில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரவி இருக்கும் அச்சுறுத்தலாகும். இந்த நிலையில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருப்பது நம்பிக்கையைக் கொடுக்கிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது அவருடைய நேர்மையை காட்டுகிறது.
முதல் தகவல் அறிக்கை (FIR) இல்லாமல் போலீசார் விசாரணை நடத்தக் கூடாது என்பதே சட்டம். ஆனால், இங்கு அந்த அடிப்படை விதியே மீறப்பட்டுள்ளது. போலீசாரின் செயல், சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படும் குண்டர்களைப் போல உள்ளது என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. போலீசாரின் அதிகாரமும், ஆணவமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுகிறது. விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான உச்சநீதிமன்றத்தின் 11 வழிகாட்டுதல்களும் காவல்துறையால் பின்பற்றப்படுவதில்லை.
அஜித் குமார் கொலை என்பது ஒரு ‘என்கவுன்டர்’ என்று கூறி மறைக்கக்கூடியது அல்ல. இது அரசால் நடத்தப்படும் பயங்கரவாதம். இதற்கு நாம் கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கின்றோம். அஜித் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். கைது செய்யப்பட்ட காவலர்களை பிணையில் விடாமல், வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி தாமதிக்காமல் வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.