தீ விபத்து ஏற்படும் சூழலில் தானாகவே செயல்பட்டு தீயை அணைக்கும் நவீன கருவி சென்னை காவல் ஆணையரகத்தில் நிறுவப்பட்டது

தீ விபத்து ஏற்பட்டால் தானாக வெடித்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தும் புதிய பந்து வடிவ தீயணைப்பு கருவி தற்போது சென்னை காவல் ஆணையரகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது ‘AFO’ (Auto Fire Off Fire Extinguisher Ball) எனப்படும். விரைவில் இது டிஜிபி அலுவகம் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களிலும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரக தலைமையகம் 8 மாடிகள் கொண்டது. தரைத்தளத்தில், பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் மனுக்களை திங்கள் முதல் வெள்ளி வரை, அரசு விடுமுறை தவிர, நேரில் சமர்ப்பிக்கலாம். மேல்மாடிகளில் சைபர் குற்றப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் பிரிவுகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் உள்ளன.

8-வது மாடியில் காவல் ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர்களுக்கான தனித்தனி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் சில அமைச்சுப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். முக்கியமான வழக்குகளின் ஆவணங்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

தீப்பற்றும் அபாயங்கள் ஏற்பட்டால் அதிர்ச்சி அல்லது இழப்பு ஏற்படாத வகையில், இந்த பந்து வடிவ தீயணைப்பு கருவிகள் ஒவ்வொரு மாடியிலும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதில் வெப்பம் ஏற்பட்டவுடன் பந்து வெடித்து அதற்குள் இருக்கும் வெள்ளை ரசாயனப் பொருள் வெளியேறி தீயை அணைக்கும்.

இந்த கருவியை யாரும் எளிதாக தீப்பற்றும் பகுதியில் வீசலாம் அல்லது உருட்டலாம். வெடித்தவுடன் 3 முதல் 5 விநாடிகளில் தீயை கட்டுப்படுத்தும் திறன் இதற்குள்ளது. இது தீயணைப்பு வீரர்கள் வரும் முன்னே தீயை கட்டுப்படுத்தக்கூடிய பாதுகாப்பு கருவியாக போலீஸ் அதிகாரிகள் விளக்கினார்கள்.

Facebook Comments Box