“தமிழக முதல்வர் சட்டப்படி ஆட்சி நடத்தவில்லை. காவல் நிலையங்களை திமுகவினர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில், போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்கு இன்று சென்ற டாக்டர் கிருஷ்ணசாமி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழகத்தில் காவல் காவலில் மரணங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பதைப்போலும், இத்தகைய சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவது மனவேதனையை ஏற்படுத்துகிறது.

போலீசார், உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த வழிமுறைகளை பின்பற்றாமல், விசாரணைக்காக அழைத்துச் செல்லும் பொழுது முறைகேடாக செயல்படுகின்றனர். மடப்புரத்தில் நடந்த நிகழ்வில், ஒரு நகை காணாமல் போனதை காரணமாக்கி ஒரு உயிரை பறித்திருக்கிறார்கள். இது அஜித்குமாரின் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், தமிழக மக்களுக்கே ஏற்பட்ட பெரிய இழப்பாகும்.

இந்த வழக்கு தற்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் உரிய தண்டனையை பெறுவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதற்கு முன்னர் தூத்துக்குடி போன்ற இடங்களில் நடந்த சம்பவங்களில் கூட, குற்றவாளிகளாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவை கண் துடைப்பாகவே இருந்தது. தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படாததால் தான் மீண்டும் மீண்டும் இத்தகைய குற்றச்செயல்கள் நடக்கின்றன.

எளிய குடும்பத்தை சேர்ந்த அஜித்குமார் நகை திருடியிருக்கக் கூடும் என்ற எண்ணம் நம்ப முடியாததாக இருக்கிறது. அவரது குடும்பத்தினர் நிதி உதவி வேண்டாம், நீதியே வேண்டும் என்று கேட்டுள்ளனர். தமிழக அரசு இது போன்ற வழக்குகளை சிபிஐ-க்கு ஒப்படைப்பது பரபரப்புக்காக மட்டுமே. ஆனால் சிபிஐ நேர்மையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் எதிர்காலத்தில் காவல் நிலையத்தில் மரணங்கள், அதிகாரபூர்வ அத்துமீறல்கள் குறைய முடியும்.

பல காவல் நிலையங்களில் திமுகவின் கட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், சில இடங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரே அதிகமாக பணியாற்றுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. காவல் நிலையங்களில் அனைத்து சமூகத்தினரும் சமமாக பங்கு பெறவேண்டும். அந்த சமநிலையே இல்லாததால் இத்தகைய பிரச்சனைகள் உருவாகின்றன.

இந்த கொலை வழக்கில் இப்பகுதியைச் சேர்ந்த திமுகவினருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால் தான் உண்மையான நீதி கிடைக்கும். காவல் நிலையங்களை அரசியல் கட்சிகள் கட்டுப்படுத்துவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதவாறு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

Facebook Comments Box