சீமான் மீது டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்ற தடை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு, உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
திருச்சி சரக டிஐஜியாக உள்ள வருண்குமார், முன்னதாக அந்த மாவட்டத்தில் எஸ்பியாக பணியாற்றியபோது, சமூக ஊடகங்களில் அவர் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினரால் அவதூறு கருத்துகள் பதிவானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி 4-வது நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் எனக் கோரி, சீமான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது வருண்குமார் குறித்த தனிப்பட்ட கருத்து தெரிவித்ததாகவும், அதனை காரணமாக காட்டி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், காவல் அதிகாரியான வருண்குமார் அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு, நாம் தமிழர் கட்சி மீது சமூக ஊடகங்களில் தவறான புகார்கள் எழுப்பியதாக சீமான் குற்றம்சாட்டினார். ஒரு காவல் அதிகாரிக்கு இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த மனுவை நீதிபதி எல். விக்டோரியா கவுரி விசாரித்தார். விசாரணையில், டிஐஜி வருண்குமார் பதிலளிக்க வேண்டியதுடன், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குத் தள்ளி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.