“அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதல்ல,” என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகிலுள்ள மடப்புரத்தில், போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தை ஜூலை 3-ம் தேதி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“அஜித்குமாருக்கு எதிராக புகார் அளித்த பெண்ணுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவை குறித்தும் முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். அவ்வாறு தவறு செய்திருப்பது உறுதியானால், அந்த பெண்ணையும் கைது செய்ய வேண்டும்.
மேலும், தனிப்படை போலீசாரை அனுப்ப உத்தரவு வழங்கிய ஐஏஎஸ் அதிகாரி யார் என்பது பற்றிய தகவலும் அரசால் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.
அஜித்குமார் கொலை வழக்கில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் முறையாக இல்லை. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். மக்களும் இதையே எதிர்பார்க்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீட்டு மனை பட்டா அளித்துவிட்டால் மட்டும் போதாது; வீட்டும் கட்டித் தரப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.