கடலூரில் பள்ளி வேனில் ரயில் மோதிய பயங்கர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் நேற்று நடந்த பேரழிவில், பள்ளி வேன் மீது ரயில் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தது மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, தனது எக்ஸ் (முன்னைய ட்விட்டர்) கணக்கில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:
“கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில், பள்ளி மாணவர்கள் பயணம் செய்த வேனில் பயணிகள் ரயில் மோதிய துயரச்சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தது எனை பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும், மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு முழுமையான மருத்துவ சேவையை வழங்க, திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் மீண்டு பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”
விபத்தின் பின்னணிக் காரணிகள்:
ஜூலை 8 ஆம் தேதி காலை, கடலூரில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான ஒரு வேன், நான்கு மாணவர்களுடன் செம்மங்குப்பம் வழியாக பயணித்தது. இந்த வேனை, மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த சங்கர் (47 வயது) ஓட்டிச் சென்றார். காலை சுமார் 8 மணியளவில், ரயில்வே கேட்டை கடக்கும் முயற்சியில் இருந்த வேன், விழுப்புரம் – மயிலாடுதுறை இடையே பயணித்துப் வந்த ரயிலால் மோதப்பட்டது.
ரயிலின் வேகம் அதிகமாக இருந்ததால், வேன் நசுங்கி கவிழ்ந்தது. இதில் தொண்டமாநத்தத்தைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்னக்காட்டுசாகையைச் சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், சின்னக்காட்டுசாகையைச் சேர்ந்த செழியன் (15), தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஷ்வேஸ் (16), மற்றும் வேன் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
விசாரணையும் நடவடிக்கைகளும்:
விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சம்பவம் கடலூர் முழுவதும் பெரும் சோகத்தையும், மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சோகம் ஏற்பட காரணமாக, ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியம் இருந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கேட்டை சரியாக மூடாமல், கடமையில் இருந்த கேட்கீப்பர் தூங்கிவிட்டதால் இந்த விபத்து நடந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, ரயில்வே அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி வருகின்றனர். கேட் கீப்பராகப் பணியாற்றிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா (32 வயது) பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.