மரம் வெட்ட சட்டவிரோத அனுமதி வழங்கிய குமரி வன அலுவலர்கள் மீது நடவடிக்கை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

குமரி மாவட்டத்தில் தனியார் வனப்பகுதியில் ரப்பர் மரங்களை சட்டத்துக்கு முரணாக வெட்ட அனுமதி வழங்கிய வன அலுவலர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட்தாஸ் என்பவர் மதுரை அமர்வு உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கடையல் பகுதியில் உள்ள தனியார் வனப்பகுதியில் வளர்ந்திருந்த சுமார் 4,000 ரப்பர் மரங்களை வெட்ட அனுமதி வழங்கும் பொருட்டு வன அலுவலர்களான ஆனந்த், ஷாநவாஸ் கான், ஸ்ரீவல்சன் ஆகியோர் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் தனிநபர்களுக்கு அனுமதி வழங்கினர்” என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மரங்கள் ஆற்றுப் புறம்போக்கு பகுதிகளில் வளர்ந்திருந்ததாகவும், அவற்றையும் வெட்டிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரப்பர் மரங்களை வேரோடு பிடுங்க ஜெசிபி, ஹிட்டாச்சி போன்ற கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக அந்த பகுதியின் இயற்கைச் சூழலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனைக் கொண்டே, வனத்துறை விதிகளை மீறி செயல்பட்ட வன அலுவலர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் ஆட்சி ரீதியான தண்டனைகள் விதிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு விதிமுறைகளுக்கேற்ப, மரங்களை அனுமதியின்றி வெட்டுவதைத் தடுக்கும் வகையில் அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியகிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் வாதிடும்போது, சம்பந்தப்பட்ட வன அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்த நீதிபதிகள், மனுவை முடித்து வைத்தனர்.

Facebook Comments Box