‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 99 அயலகத் தமிழ் இளைஞர்களின் பண்பாட்டு பயணம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் 4-வது கட்டமாக, உலகின் 14 நாடுகளைச் சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் தமிழகத்தின் பண்பாட்டுச் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் நிகழ்வை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

2023-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை மற்றும் பண்பாட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘வேர்களைத் தேடி’ திட்டம், அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு தமிழர் பண்பாட்டு அடையாளத்தை நேரில் உணர வழிவகுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. தமிழ் மொழி, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரிய வரலாற்றை நெருக்கமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குவதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்கிணங்க, 18 முதல் 30 வயதிற்குள் உள்ள அயலகத் தமிழ் இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு, தமிழகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிப் பார்க்கின்றனர். அதோடு, தமிழரின் வாழ்வியல், தொன்மைமிக்க கட்டிடக்கலை, சிற்பங்கள், நீர் மேலாண்மை மரபுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல், ஆடைகள், பண்பாட்டு நிகழ்வுகள், தொல்லியல் பார்வைகள் போன்ற பல்வேறு அனுபவங்களில் பங்கேற்கின்றனர்.

இதுவரை 3 கட்ட பயணங்களில் 17 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 194 அயலகத் தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். பயணத்தை முடித்த பின், அந்த இளைஞர்கள் தங்களது நாடுகளில் தமிழர் கலாச்சார தூதர்களாக செயல்பட, தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைகளை பரப்பி வருகின்றனர்.

இப்போது நடைபெறும் 4வது கட்ட பயணத்தில், பிஜி, ரீயூனியன், மார்டினிக், குவாடலூப், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, மியான்மர், மொரீஷியஸ், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி ஆகிய 14 நாடுகளின் 99 இளைஞர்கள் பங்கேற்கின்றனர். ஆகஸ்ட் 1 முதல் 15-ம் தேதி வரை, அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

இந்த நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, பயணத்திற்குத் தேவையான பாக்ஸ், கிட்டுகள் உள்ளிட்ட பொருட்களை இளைஞர்களிடம் வழங்கினார். நிகழ்வில் அமைச்சர் சா.மு.நாசர், தலைமைச் செயலர் முருகானந்தம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், அயலகத் தமிழர் நல ஆணையர் வள்ளலார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box