திடக்கழிவு மேலாண்மைக்கு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க சென்னை ஐஐடுடன் தூய்மை தமிழ்நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்து

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தும் நோக்கில், தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி இணைந்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சற்றுமுன் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநிலம் முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தினசரி உருவாகும் திடக்கழிவுகளை விஞ்ஞான ரீதியாக கையாளும் முனைப்பில், சிறப்பு திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் “தூய்மை இயக்கம்” என்ற ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் அடிப்படையிலான முன்னேற்றம்

இந்த இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் தூய்மை தமிழ்நாடு எனப்படும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் ஊடாக மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மைக்கு நீடித்த மற்றும் செயல்திறன் வாய்ந்த தீர்வுகளை உருவாக்கும் பணியை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல் சார்ந்த முறையில் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சீராக கையாள்வதற்கும், அவற்றை மீள்சுழற்சி செய்வதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்பை வடிவமைப்பதற்காக சென்னை ஐஐடியின் துணையுடன் தூய்மை தமிழ்நாடு நிறுவனம் கூட்டாண்மையாக செயல்படவுள்ளது.

இந்தக் குறிக்கோளுக்காக, தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் (CTCL) சென்னை ஐஐடி இயக்குநரும் தலைமைச் செயலகத்தில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

இந்த ஒப்பந்தம், ஐநாவின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும், மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மையில் எதிர்கொள்கின்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், மேலும் சுற்றுச்சூழல் ஒழுங்குவிதிகளுக்கேற்ப தொழில்நுட்ப உதவியுடன் மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் வழிகாட்டும்.

இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் நா. முருகானந்தம், சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ், தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். உமா மற்றும் ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box