விழுப்புரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் – கூட்டநெரிசலில் சிக்கி பாடுபட்ட பொதுமக்கள்!

விழுப்புரம் பகுதியில் நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாமில் சரியான ஏற்பாடுகள் இல்லாததால், மக்கள் கூட்டநெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்முடி, லட்சுமணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாம் மருத்துவம் மற்றும் மக்கள் நலத் துறையின் சார்பில் நடைபெற்றது.

முகாம் தொடங்கும் நேரத்திற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பே பொதுமக்கள் வரத் தொடங்கினர். 15 துறைகளின் சிகிச்சைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரண்டனர்.

புறநோயாளிகள் பதிவு செய்யும் இடமாக ஒரு அறை மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், ஒரே இடத்தில் மக்கள் தேக்கமடைந்து, காற்றோட்டம் இல்லாத சூழ்நிலையில் சுவாசிக்க கூட சிரமப்பட்டனர். இதில் நோயாளிகளுடன் சுகாதார ஊழியர்களும் அவதிக்குள்ளானார்கள். பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

அதேபோல், ரத்த அழுத்த பரிசோதனை செய்யும் அறையில் கூடுதலான நெரிசல் ஏற்பட்டது. இதேபோன்று மற்ற சில சிகிச்சை பிரிவுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 39 இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்கள் நவம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. எனவே, இனிவரும் முகாம்களில் இவ்வாறான நெரிசல் ஏற்படாமல், முன்னேற்பாடுகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் நோய் பரவல் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால், அந்தச் சீருடைத் துறையினர் இதையும் கருத்தில் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Facebook Comments Box