எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான முன்னேற்ற நிலையை ஆய்வு செய்ய வேண்டும் – தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்ய மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கல்வி பெறும் மாணவர்களின் அடிப்படை கல்வித் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாநில அடைவுகள் மற்றும் அடிப்படை கல்வித் திறன் மதிப்பீடுகளின் அடிப்படையில் கற்றல் இடைவெளிகளை குறைத்து, ஒவ்வொரு மாணவரும் தமிழ் மற்றும் ஆங்கில வாசித்தல், அடிப்படை கணிதத் திறன்களை முழுமையாக கற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாட்டிற்குப் பொறுப்பாக இருக்கும் கண்காணிப்பு அதிகாரிகள், பள்ளிகளில் நடத்தும் கல்வி நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் போது வகுப்பறைச் செயல்முறை, மாணவர்கள் வேலைப்புத்தகங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், மாணவர்களின் ஈடுபாடு, தனிநபர் வழிகாட்டல் வழங்கப்படுகிறதா என்பனவற்றை கவனிக்க வேண்டும்.

அத்துடன், மாதாந்திரம் மற்றும் காலாண்டாக நடைபெறும் மதிப்பீடுகளின் மூலம் மாணவர்கள் எந்த அளவிற்கு முன்னேறுகிறார்கள் என்பது பதிவுசெய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் பயனளிக்கின்றனவா என்றதும் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் மாதந்தோறும் பயணத் திட்டங்களை உருவாக்கி ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box