சென்னையில் பருவமழைக்கு முன்னெச்சரிக்கையாக ₹30.52 கோடியில் 477 நீர் பம்பிங் டிராக்டர்கள் வாடகைக்கு!

வடகிழக்கு பருவமழையை சமாளிக்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி ₹30.52 கோடி செலவில் 477 நீர் பம்பிங் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சென்னை மாநகரப் பகுதிகள் தொடர்ந்து கான்கிரீட் அமைப்புகளால் நிரம்பிக்கொண்டே செல்கின்றன. மாநகராட்சியின் பல்வேறு திட்டங்கள் கான்கிரீட் சாலைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் நடைபாதைகள் உருவாக்கம் சார்ந்தவையாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், மழைநீர் இயற்கையாக நிலத்தில் சிந்தாமல், தேங்கும் நிலைகள் பெருகியுள்ளன. மேலும், மெட்ரோ ரயில் கட்டுமானம், நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வழங்கும் வாரியம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சாலைகள் அகழும் பணியில் ஈடுபடுவதால், இயல்பான நீர் ஓட்ட வழிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மழைநீர் தேக்கம் அதிகரிக்கிறது.

இந்த சூழலில், வடகிழக்கு பருவமழை வரும் வாரங்களில் தொடங்கவுள்ளது. இதை முன்னிட்டு, மாநகராட்சி நிர்வாகம் முறையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மழைநீர் தேங்கும் பகுதிகள் முன்கூட்டியே கண்காணிக்கபட்டுள்ள நிலையில், அவற்றுக்கு ஏற்ப டிராக்டர் மூலம் இயங்கும் நீர் பம்பிங் சாதனங்களை வாடகைக்கு எடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மண்டலங்கள் வாரியாக ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

“நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி இருக்கும் சந்தர்ப்பங்களில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் நகர்த்தக்கூடிய வகையில், டிராக்டர் மூலம் இயக்கும் பம்பிங் இயந்திரங்கள் கடந்த ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டன. அவை மிகச் சிறந்த பயனளித்தன. எனவே, இந்த ஆண்டும் அதே முறை பின்பற்றப்படுகின்றது. இதன்படி, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 14 வரை உள்ள நான்கு மாதங்களுக்கு, 477 நீர் இறைக்கும் டிராக்டர்கள் தயார் நிலையில் வாடகைக்கு எடுக்கப்பட உள்ளன. ஒவ்வொரு டிராக்டருக்கும், டீசல் செலவைத் தவிர்த்து, அதிகபட்சமாக ₹1.60 லட்சம் மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”

அதன்படி, மொத்தமாக ₹30.52 கோடி மதிப்பிலான டெண்டர்கள் அழைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்த தொகையில் ஒப்பந்தம் கோரும் நிறுவனங்களுக்கு பணி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Comments Box