கமலிடம் இருந்து சூர்யாவரைக்கும் – அகரம் ‘விதை’ 15-ம் ஆண்டு விழாவின் முக்கிய தருணங்கள்!

சென்னையில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில், அகரம் ‘விதை’ திட்டத்தின் 15-வது ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, கமல்ஹாசன், கார்த்தி, சிவகுமார், ஜோதிகா, இயக்குநர்கள் ஞானவேல், வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அகரம் அமைப்பின் பயனாளிகளும், தங்களது வாழ்க்கை அனுபவங்களை அந்த மேடையில் பகிர்ந்தனர்.

விழாவை தொடங்கி வைத்த நடிகர் சூர்யா, “இன்று ‘விதை’ திட்டம் 15 ஆண்டுகளை கடந்துள்ளது. கல்வி என்பது ஒரு வலிமையான ஆயுதம் என்பதை நம்பிய அகரத்தின் கனவு இன்று நனவாகியுள்ளது. கல்வி என்பது நூல்களுக்குள் மட்டும் அல்ல, மாணவர்களின் திறமை மற்றும் பண்புகளை வளர்க்கும் செயலாகவும் இது அமைகிறது. இதுவரை சுமார் 6,700 பேர் முதல்முறை பட்டம் பெற்றுள்ளனர்.

அவர்களின் குடும்பங்கள் முன்னேறியுள்ளன. இந்த பயனாளிகளே இப்போது அகரத்தின் சுழற்சியில் பங்களிக்கின்றனர். அவர்கள் சமூகத்தில் உள்ள வேறு மாணவர்களுக்கும் உதவுகின்றனர். இந்த முயற்சி, கல்வி எப்படிப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்கிறது” என்று கூறினார்.

பின்னர், பயனாளிகள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைக் கூறியபோது, பலரும் உணர்ச்சி வசப்படும்படி இருந்தது.

நடிகர் கார்த்தி உரையில், “அகரத்தின் முதுகெலும்பு தன்னார்வலர்கள்தான். அவர்கள் அனைவரும், மற்றவர்களும் நல்ல வாழ்கை வாழ வேண்டும், கல்வி பெற வேண்டும் என விரும்பும் மனதுடன் செயல்படுகிறார்கள். பயனாளிகளின் வாழ்க்கை நிலையை நேரில் சென்று பார்க்கும் குழுவினரின் பயணம் ஒரு அரிய முயற்சி. இந்த முயற்சியில் மேலும் பலர் கையொப்பமிட வேண்டும். ஏனெனில், கல்வி தேவைப்படும் மேலும் பலர் இருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டார்.

இயக்குநர் வெற்றிமாறன் தனது உரையில், “நான் அரசுப் பள்ளியில் பயின்றவன். என் அம்மா ஒரு பள்ளி நடத்திய அனுபவம் பெற்றவர். இந்த நிகழ்விற்கு பார்வையாளராக வந்தேன். ஆனால் இந்த மேடையில் உள்ளவர்களின் உணர்வுகள் என்னை நெகிழ வைக்கின்றன. அகரம் இல்லையெனில், அந்த மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என யோசிக்க நேர்ந்தது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் சூர்யா வணிக நோக்குடன் சென்றிருந்தால் வேறு திசையில் சென்றிருக்கலாம். ஆனால் அவர் தனது நோக்கை மாற்றி ‘விதை’ திட்டம் மூலம் இளைஞர்களுக்கு கல்வியை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தார். இது வெறும் சமூக சேவை அல்ல. இது relay race போன்ற ஒன்று – பயனடைந்தவர்கள் மீண்டும் அமைப்புக்கு உதவுகிறார்கள். இந்த வாய்ப்புக்காக நன்றி” என தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் உரையில், “அன்பும் கல்வியும் ஒரே நேரத்தில் கிடைப்பது அரிது. அம்மா ஒருவரிடம்தான் அது கிடைக்கும். அகரம் போன்ற அமைப்பிலும் அது கிடைக்கிறது. இப்படி நற்பணியில் ஈடுபடும் மக்களுக்கு புகழ் கிடைக்கும்.

விழாவில் காணப்பட்ட மருத்துவர்களில் சிலரை அடுத்த விழாவில் நாம் காண முடியாது. காரணம் – நீட் தேர்வின் விளைவு. அதனால்தான் நாம் நீட் தேவையில்லை என்று சொல்கிறோம். கல்விதான் இந்த சட்டங்களை மாற்றும் வலிமை தரும். அது நாட்டையே மாற்றக்கூடியது.

சினிமா நிகழ்ச்சிகளில் கிடைக்காத சந்தோஷம் இந்த நிகழ்வில் கிடைத்தது. சினிமா மகிழ்ச்சியளிக்கிறது, ஆனால் அது ஒரு வணிகம். இது அன்பும் கல்வியுமே சேர்ந்த முயற்சி. இதன் மூலம் நாம் உலகையே மாற்றலாம்” என்றார்.

மீண்டும் சூர்யா பேசுகையில், “பலரும் தனிநபராகவும், நிறுவனமாகவும் உதவிகளை செய்து வருகிறார்கள். எனக்குக் கிடைத்த அன்புக்கு நன்றியுணர்வாக 2006-ல் அகரத்தை ஆரம்பித்தேன். கல்வி என்பது அனைத்தையும் வழங்கக் கூடியது என்பதை நம்பிய திட்டம் இது.

சிங்கம் படப்பிடிப்பின்போது நற்பண்புடைய நபர்களின் உதவியுடன் சுமார் ₹1 கோடி திரட்டி, மாணவர்களின் கல்வி கனவை நிறைவேற்ற முயற்சித்தோம். கல்வி நிறுவனங்களும் ஆதரித்தன. மாணவர்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்கிறோம். பொருளாதார தடைகளை நீக்குவதோடு மனதடைகளையும் கடக்கச் செய்வதே இந்த முயற்சி.

இது ஒரு அழகான பயணம். இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறது. இதன் வெற்றி, ஒவ்வொருவரது பங்களிப்பால் தான். இது நமக்குத் தரும் உறவுகளும் மதிப்பும் அளவிலாதவை” என சூர்யா சுட்டிக்காட்டினார்.

Facebook Comments Box