வங்க மொழியை வங்கதேசத்தின் மொழி என குறிப்பிடுவது தவறு – மத்திய அரசை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கண்டனம்
வங்க மொழியை வங்கதேசத்தின் மொழி என டெல்லி காவல்துறை குறிப்பிட்டிருப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்துள்ளார். இந்தச் செயலை மறுத்து, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரிய பதிலை வழங்குவார் என அவர் கூறியுள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தாவின் ட்வீட்டை மேற்கோளாகக் காட்டிய ஸ்டாலின் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில் கூறியுள்ளதாவது: “ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை, வங்காள மொழியை ‘வங்கதேச மொழி’ என குறித்திருப்பது, நமது தேசிய கீதம் எழுதிய மொழிக்கு நேரடியாக அவமதிப்பு செய்யும் செயல் ஆகும்.
இது தவறுதலாகச் சம்பவித்த ஒரு சாதாரண பிழை அல்ல. இந்தியாவின் பன்முகத்தன்மையை அடிக்கடி குறைக்கும், அடையாள அடிப்படையிலான தாக்குதல்களை நிகழ்த்தும் ஆட்சியின் கரடுமுரடான நோக்கத்தையே இது வெளிப்படுத்துகிறது.
இந்தி தவிர்ந்த பிற இந்திய மொழிகளை குறிவைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் நடக்கும் வேளையில், மேற்கு வங்கத்தின் மொழியையும் மக்களையும் பாதுகாக்கும் காவலனாக மம்தா பானர்ஜி இருக்கிறார். இந்தக் கோரிய பிழைக்கு அவர் உரிய பதிலை அளிக்காமல் இருப்பது சாத்தியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், டெல்லியின் லோதி நகர் காவல்நிலையம், மேற்குவங்க காவல்துறைக்கு அனுப்பிய கடிதத்தில், “சில ஆவணங்கள் வங்கதேச மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் குறிப்பை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டிருந்த பதிவைத் தொடர்ந்து, தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.