கவின் கொலை வழக்கை உயர் நீதிமன்றமே நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்: நீதிமன்றத்தில் கோரிக்கை
நெல்லையில் காதல் தொடர்பான பிரச்னையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணையை நேரடியாக கண்காணிக்கவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு முன்வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறுமுகமங்கலம் பகுதியில் வசிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27-ம் தேதி திருநெல்வேலி கே.டி.சி. நகர் பகுதியில் காதல் விவகாரம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் பெற்றோர்களான, தமிழக சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீது கொலை வழக்கு பதிந்து, இருவரையும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்தனர். பின்னர் சரவணன் கைது செய்யப்பட்டதற்குப் பின், கவினின் உடலை அவரது பெற்றோர் தகனம் செய்தனர்.
இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியகிளாட் அமர்வில், கவின் கொலை வழக்கை நேரடியாக உயர் நீதிமன்றமே கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் பினேகாஸ் மற்றும் செல்வகுமார் ஆஜராகி, “நெல்லையில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிக முக்கியமானது. இது குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால், இந்த விசாரணை ஐபிஎஸ் நிலை அதிகாரி ஒருவரால் நடத்தப்படவேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரும் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும். விசாரணை முழுவதையும் உயர்நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், மனுதாரர்கள் இந்த கோரிக்கையை பட்டியலிடப்பட்ட மனு மூலமாக சமர்ப்பித்தால், அது விசாரணைக்காக ஏற்கப்படும் எனக் கூறினர்.