டிஜிபி நியமனத்தில் கோட்பாடு மீறல் இருந்தால், நீதிமன்றம் தலையிடும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழக டிஜிபி நியமனத்தில் எந்தவொரு விதிமீறல் அல்லது முறைகேடும் ஏற்பட்டால், நீதிமன்றம் தவறாமல் தலையீடு செய்யும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் ராஜ வீதியைச் சேர்ந்த யாசர் அராபத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாட்டின் தற்போதைய டிஜிபியான சங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். ஆனால், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு இதுவரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பவில்லை. தற்போதைய டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படுவதற்கும், ஓய்வுக்குப்பின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு முரணானவை. தமிழகத்தில் 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், சீரான நிர்வாகத்துக்காக உயர்மட்டப் பதவிகளில் தங்களுக்கு ஏற்றவர்களை வைத்து செயல்பட அரசு முயலுகிறது. தற்போது தமிழகத்தில் ஆணவக் கொலை, கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, டிஜிபி பதவி சட்டபூர்வமான முறையில் நிரப்பப்பட வேண்டியது அவசியம்,” என கூறப்பட்டிருந்தது.

மேலும், “தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு ஓய்வு பெற்ற பிறகு, பொறுப்பு டிஜிபியாக நியமிக்க வேண்டாம்; அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கக்கூடாது என இடைக்கால தடை வழங்க வேண்டும். டிஜிபி பதவிக்கு தகுதியுடைய ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை உடனடியாக தமிழக அரசு தயாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் தரப்பில், “தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, புதிய டிஜிபி நியமனத்துக்கான நடைமுறைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்” என கோரப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “2006-ம் ஆண்டு ‘பிரகாஷ் சிங்’ வழக்கில் உச்சநீதிமன்றம் டிஜிபி நியமனத்துக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதனை 2019-ல் நீதிபதி தீபக் மிஸ்ரா மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். டிஜிபி பதவி சீனியாரானவர்களுக்கே வழங்கப்படவேண்டும் என நீதிபதி நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் இதற்கான நெறிமுறைகளை வகுத்துள்ளது.

ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை. எனவே, டிஜிபி நியமனத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதை தெளிவாக அரசு தரப்பில் விளக்க வேண்டும். இதில் எந்தவொரு முறைகேடும், கோட்பாடு மீறலும் இருந்தால், நீதிமன்றம் தலையிடும்” என எச்சரித்தனர்.

இந்த வழக்கில், மத்திய உள்துறை செயலர், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குத் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்திவைத்தனர்.

Facebook Comments Box